மின் வாரியத்தில் வெளியாகும் செய்திகள் உடனுக்குடன்

Sunday, October 6, 2013

மின் ஊழியர்களுக்கு, போனஸ் தொழிற்சங்களுடன் பேச்சுவார்த்தை

மின் ஊழியர்களுக்கு, போனஸ் வழங்குவது சம்மந்தமாக, நேற்று, மின் வாரிய அலுவலகத்தில், தொழிற்சங்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில், 70 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு, ஆண்டுதோறும், மின் ஊழியர்களுக்கு, போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு போனஸ் வழங்குவது சம்மந்தமாக, தொழிற்சங்கங்கள் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் இடையே, நேற்று காலை, 11.00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை பேச்சுவார்த்தை நடந்தது. இதில், அங்கீகரிக்கப்பட்ட, 15 தொழிற்சங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். போனஸ் தொகையை காலம் தாழ்த்தாமல், உடனே வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொது செயலர் சுப்ரமணியன் கூறுகையில், "'மின் வாரியத்தில் பணியாற்றும், அதிகாரிகள், பொறியாளர், ஒப்பந்தம் மற்றும் பகுதி நேர தொழிலாளர் என, அனைவருக்கும், 8.33 சதவீத போனஸ் மற்றும், 21.67 சதவீத கருணை தொகை என, 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும்,'' என்றார். மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,'பேச்சுவார்த்தை குறித்த தகவல்கள், உயர் அதிகாரிகள் மூலம் தமிழக அரசிடம் தெரிவிக்கப்படும். அதன் பின்னர், போனஸ் தொகை அறிவிக்கப்படும்' என்றார்.