
ஆர்ப்பாட்டம் : ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிற்சங்க உரிமையை பறிக்காதே உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 12 அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஓய்வூதியர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் என்.எல்.ஸ்ரீதரன், பொதுச் செயலாளர் ஜெகதீசன், பொருளாளர் கர்சன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிப். 20, 21 ல் நடைபெற்ற 48 மணி நேர வேலை நிறுத்தம் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் போன்றகொள்கைகளுக்குஎதிராக மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றுபட்டு 48 மணி நேர வேலைநிறுத்தபோராட்டத்தைவெற்றிகரமாக நடத்தின.
அதன் தொடர்ச்சியாக ஆக.6ல் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் புதிய பென்சன் திட்டத்தை கைவிடுதல், அனைவருக்கும் உத்தரவாதத்துடன் கூடிய பென்சன் வழங்குதல், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிற்சங்க உரிமையை நிலை நாட்ட வேண்டும், அனைத்து முறைசாரா, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ. 10ஆயிரம் வழங்க வேண்டும், தொழிற்சங்க சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனையை கைவிட வேண்டும், உலகமய, தனியார்மய, தாராளமய கொள்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.12 அன்று நாடாளுமன்றம் முன்பு மாபெரும் போராட்டத்தை நடத்த முடிவு செய்திருந்தது.
அந்த போராட்டத்தில் கூட்டமைப்பின் சார்பாக 500க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொள்கிறார்கள். அதே தினத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அனைத்து தொழிற்சங்கம் நடத்தும் இயக்கங்களில் அனைவரும் திரளாக பங்கேற்பார்கள்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.