மின் வாரியத்தில் வெளியாகும் செய்திகள் உடனுக்குடன்

Friday, March 28, 2014

2005–ம் ஆண்டு பணி நிரந்தரம் ஆனவர்களுக்கு புதிய ஓய்வூதிய விதிகள் பொருந்தாது ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை,
2005–ம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு, 2 மத்திய அரசு கொண்டு வந்த புதிய ஓய்வூதிய திட்ட விதிகள் பொருந்தாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், மத்திய அணுசக்தி துறையும், கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகம் தாக்கல் செய்த அப்பீல் மனுவில் கூறியிருப்பதாவது:–
தற்காலிக பணியாளர்கள்
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், 1999–ம் ஆண்டு புண்ணியகோடி, கோதண்டம், அர்ஜூனன் உட்பட 50 பேர் தற்காலிக பணியாளராக நியமிக்கப்பட்டனர். பின்னர், அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட காலி பணியிடங்களின் அடிப்படையில், தற்காலிக பணியாளர்கள் 50 பேரில், 34 பேருக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டது.

மீதமுள்ள 16 பேரை கடந்த 2005–ம் ஆண்டு பணி நிரந்தரம் செய்தோம். இந்த நிலையில், 2004–ம் ஆண்டு, மத்திய அரசு, புதிய ஓய்வூதிய விதிகளைக் கொண்டு வந்தது.
தீர்ப்பாய உத்தரவு
இதன் அடிப்படையில், 2005–ம் ஆண்டு பணிநிரந்தரம் செய்யப்பட்டவர்களுக்கு, பழைய ஓய்வூதிய விதிகளின்படி ஓய்வூதியப் பலன்கள் கிடையாது என்றும் அவர்களுக்கு புதிய ஓய்வூதிய விதிகள்தான் பொருந்தும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து 2005–ம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யப்பட்ட புண்ணியகோடி உட்பட 16 பேர் சென்னையில் உள்ள மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், 16 பேருக்கும் பழைய ஓய்வூதியம் விதி பொருந்தும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
உத்தரவு சரிதான்
இந்த அப்பீல் வழக்கை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், ‘‘புண்ணியகோடி உள்ளிட்ட 16 பேரும், 1999–ம் ஆண்டு தற்காலிக பணியாளர்களாக பணியில் சேர்ந்துள்ளனர். பின்னர், 2005–ம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, அவர்கள், 1999–ம் ஆண்டே பணியில் சேர்ந்துள்ளதால், அவர்களுக்கு பழைய ஓய்வூதிய விதிகளின்படி ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய விதிகள் அவர்களுக்கு பொருந்தாது. இதுதொடர்பாக மத்திய நிர்வாக தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு சரிதான்’’ என்று கூறியுள்ளனர்.