
சென்னை, டிச. 31-
ஓய்வூதியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள காப்பீடு குறித்து தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன், பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்த ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை தற்போது அரசு வெளியிட்டிருக்கின்றது.இதனை தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் வரவேற்கின்றது.
குறிப்பாக ஓய்வூதியருக்கும் அவரது மனைவியருக்கும் சேர்த்து நான்கு ஆண்டுகளில் இரண்டு லட்சம் ரூபாய் வரை மருத்துவ உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் சங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தியபோது இத்தொகை தெரிவிக்கப்பட்டது. நாங்கள் தற்போது அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல நான்கு ஆண்டுகளுக்கு ரூபாய் நான்கு லட்சம் வழங்க வற்புறுத்தியிருந்தோம்.மேலும், திட்டத்தை வரவேற்கும் அதே நேரத்தில் அரசின் பொது காப்பீட்டுத் துறைக்கு வழங்குவதையும் வரவேற்கிறோம். அதேபோல் நாங்கள் வற்புறுத்தியது போல ரூபாய் நான்கு லட்சமாக உயர்த்துவதுடன், மாத சந்தாவையும் உயர்த்தாமல் இருக்க கேட்டுக்கொள்கின்றோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.