மின் வாரியத்தில் வெளியாகும் செய்திகள் உடனுக்குடன்

Monday, February 3, 2014

நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்கள் பிப். 10ல் வேலைநிறுத்த நோட்டீஸ் : தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு



நெய்வேலி, பிப். 2-
என்எல்சியில் பணிபுரியும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10ம் தேதி வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் வழங்க முடிவு செய்துள்ளனர்.
என்எல்சியில், கடந்த 5 தினங்களாக சுரங்கம் மற்றும் அனல் மின்நிலைய நுழைவு வாயில்களில் ஒப்பந்த தொழிலாளர்களின் வாயிற்கூட்டங்கள் நடைபெற்றன. சனிக்கிழமையன்று (பிப். 2) ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் 17வது வட்ட அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வரும் 6ம் தேதி கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்வது எனவும், அதற்கு முன்னதாக ஆர்ப்பாட்டம் குறித்து 5ம் தேதி சிஐடியு அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மத்திய தொழிற்சங்கமான பிஎம்எஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய 2 தொழிற்சங்கங்கள் இணைந்ததால் போராட்டம் வலுப்பெறும் என தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஐஎன்டியுசி சிறப்புத் தலைவர் சுகுமார் கூறுகையில், “உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் வரை தொழிலாளர்களின் போராட்டம் தொடரும்” என்றார்.வேலைநிறுத்தம் தொடர்பாக வரும் 10ம் தேதி நிர்வாகத்திடம் நோட்டீஸ் அளிக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.